நியூசிலாந்தை வீழ்த்துமா இந்தியா? நாளை 3 வது டெஸ்ட்

Friday, November 19, 2010

நாக்பூர்: இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் 3 வது டெஸ்ட் போட்டி, நாளை நாக்பூரில் துவங்குகிறது. இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற காத்திருக்கிறது இந்திய அணி. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளும் "டிராவில்' முடிந்துள்ளன. இதனையடுத்து 3 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, நாளை நாக்பூரில் துவங்குகிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால், அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சாதிப்பாரா சச்சின்?:முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய நட்சத்திர வீரர் சச்சின், பெரிய அளவில் சாதிக்க வில்லை. டெஸ்ட் அரங்கில் 50 வது சதம் பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு அரை சதம் கூட அடிக்க வில்லை. நாக்பூர் போட்டியில், சச்சின் இச்சாதனை புரிவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எழுச்சி தேவை: பந்து வீச்சை பொறுத்த வரை, இந்திய அணி விக்கெட் வேட்டை நடத்த வேண்டும். இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜாகிர் கான், நாக்பூர் போட்டியில் இடம் பெற வில்லை. இதனால் பவுலிங்கில் இந்தியாவுக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருக்குப் பதில் ஜெயதேவ் உனாட்கட் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும், 8 வது வீரராக களமிறங்கி சதம் அடித்து சாதித்துள்ளார் இந்திய சுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜன். ஆனால் பவுலிங்கில் கைகொடுக்க தவறிவிட்டார். நாக்பூர் போட்டியில் இவர் விக்கெட் வேட்டை நடத்தினால், இந்திய அணி எளிதில் வெற்றி பெறலாம்.

இது குறித்து இந்திய கேப்டன் தோனி கூறுகையில்,"" என்னைப் பொறுத்த வரை ஹர்பஜன் ஒரு பவுலர் தான். ஆமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், அணியை சரிவிலிருந்து மீட்க சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார் ஹர்பஜன். அதற்காக பேட்டிங்கிலும் சாதிக்க வேண்டும் என அவரை நிர்பந்திக்க முடியாது. இது அவருக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும்,'' என்றார்.

அணி அறிவிப்பு

இந்தியா, நியூசிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் மோத உள்ளன. முதல் போட்டி வரும் 28 ம் தேதி, கவுகாத்தியில் துவங்குகிறது. இத்தொடருக்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி: வெட்டோரி (கேப்டன்), எலியட், கப்டில், ஹாப்கின்ஸ், ஹவ், பிரண்டன் மெக்கலம், நாதன் மெக்கலம், மெக்கே, மில்ஸ், ரைடர், ரோஸ் டெய்லர், ஸ்காட் ஸ்டைரிஸ், டபே, சவுத்தி மற்றும் வில்லியம்சன்.

மழை வாய்ப்பு

நாக்பூரில் நடக்க உள்ள 3 வது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட, அதிக வாய்ப்பு உள்ளது. நேற்று மழையின் காரணமாக, இரு அணி வீரர்களும் காலை மட்டுமே பயிற்சி மேற்கொண்டனர். மழை தொடரும் பட்சத்தில், தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற இந்திய அணியின் கனவு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பயிற்சி பாதிப்பு

மழையின் காரணமாக இந்திய அணி வீரர்கள், இன்று பயிற்சி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வீரர்கள் வலைப்பயிற்சி மேற்கொள்ளும் 6 ஆடுகளங்களில், 2 மட்டுமே மழை நீர் புகாதவாறு மூடப்பட்டுள்ளது. மற்ற 4 ஆடுகளங்கள் கேட்பாரற்று கிடக்கிறது. இதனால் இன்று காலை இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொள்வது சிரமம் தான். ஒரு சர்வசேத போட்டி நடக்க உள்ள நிலையில், மைதானத்தில் போதிய வசதிகள் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

share

Share

feedburner