தடகளத்தில் இந்தியா தங்க மழை: பிரிஜா, சுதா சிங் அபாரம்

Sunday, November 21, 2010

குவாங்சு: ஆசிய விளையாட்டு, தடகளத்தில் இந்தியா அசத்தியது. பெண்களுக்கான 10,000 மீ., ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் பிரிஜா ஸ்ரீதரன் தங்கம் வென்றார். இப்போட்டியின் வெள்ளிப் பதக்கத்தை மற்றொரு இந்திய வீராங்கனை கவிதா ராத் கைப்பற்றினார். பெண்களுக்கான 3000 மீ., "ஸ்டீபிள்சேஸ்' ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சுதா சிங் தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
சீனாவின் குவாங்சு நகரில் ஆசிய விளையாட்டு போட்டி நடக்கிறது. நேற்று தடகளப் போட்டிகள் ஆரம்பமாகின. பெண்களுக்கான 10,000 மீ., ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் பிரிஜா ஸ்ரீதரன், கவிதா ராத் பங்கேற்றனர். பந்தய தூரத்தை 31 நிமிடம், 50.47 வினாடிகளில் கடந்த இந்தியாவின் பிரிஜா ஸ்ரீதரன், முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இவரை அடுத்து 31 நிமிடம், 51.44 வினாடிகளில் வந்த மற்றொரு இந்திய வீராங்கனை கவிதா ராத், வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். பக்ரைன் வீராங்கனை வெண்கலம் வென்றார்.
சுதா அபாரம்:
பெண்களுக்கான 3000 மீ., "ஸ்டீபில்சேஸ்' ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சுதா சிங், ஜெய்ஷா ஆர்சத்ரி புதியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பந்தய தூரத்தை 9 நிமிடம், 55.67 வினாடிகளில் கடந்த இந்தியாவின் சுதா சிங், முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதன்மூலம் இவர் தனது சொந்த சாதனையை முறியடித்தார். டில்லி காமன்வெல்த் போட்டியில் இவர், பந்தயதூரத்தை 9 நிமிடம், 57.63 வினாடிகளில் கடந்தார். மற்றொரு இந்திய வீராங்கனை புதியா, 5வது இடம் பிடித்து ஏமாற்றினார். வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை முறையே சீனா, ஜப்பான் வீராங்கனைகள் வென்றனர்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

share

Share

feedburner