அடிலெய்டு: அடிலெய்டு டெஸ்டில், பந்து வீச்சில் அசத்திய இங்கிலாந்து அணி, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 71 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, வரலாற்று சிறப்பு மிக்க 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் "டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட் அடிலெய்டில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 245, இங்கிலாந்து 620 ரன்கள் எடுத்தன.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி, 4 வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்திருந்தது. சுவான் மிரட்டல்: கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மைக்கேல் ஹசி, அரை சதம் கடந்தார். இவர், 52 ரன்களுக்கு அவுட்டானார். இவருடன் இணைந்த நார்த் (22), சோபிக்க வில்லை. அடுத்து வந்த ஹாடின் (12), ஹாரிஸ் (0) இருவரும் ஆண்டர்சன் வேகத்தில் வீழ்ந்தனர். டெயிலெண்டர்களான டோஹர்டி (5), சிடில் (6) ஆகியோர், சுவான் சுழலில் வெளியேற, 99.1 ஓவரில் "ஆல்-அவுட்டான' ஆஸ்திரேலிய அணி 2 வது இன்னிங்சில் 304 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் சுவான் 5, ஆண்டர்சன், பின் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இன்னிங்ஸ் வெற்றி:
இதன் மூலம் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ், 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை பீட்டர்சன் தட்டிச் சென்றார். இவ்வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது. இவ்விரு அணிகள் மோதும் 3 வது டெஸ்ட், டிச.16 ம் தேதி பெர்த்தில் துவங்குகிறது.
சாப்பல்-போத்தம் மோதல்
இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்த, அடிலெய்டில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் இயான் சாப்பல், இங்கிலாந்து வீரர் இயான் போத்தம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாப்பல், "சேனல்-9' நிறுவனத்திலும், போத்தம் "ஸ்கை நெட்வொர்க்' நிறுவனத்திலும் கிரிக்கெட் வர்ணணையாளர்களாக உள்ளனர். இப்போட்டியின் 4 வது நாள் ஆட்டத்தின் முடிவில், அடிலெய்டு மைதானத்தில் உள்ள கார் நிறுத்தப் பகுதியில், போத்தமை நோக்கி, சாப்பல் கேலி செய்து பேசியிருக்கிறார். இதனையறிந்த போத்தம், என்னை பார்த்து என்ன சொன்னாய்? என கோபம் அடைந்தார். உடனே இருவரும் தங்களது பைகளை கீழே போட்டு விட்டு, அடிதடிக்கு ஆயத்தமாகி உள்ளனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் தலையிட்டு, சமரசம் செய்து வைத்துள்ளனர். கடந்த 1977 ம் ஆண்டு, மெல்போர்னில் உள்ள பாரில், இயான் சாப்பல், போத்தம் இடையே தகராறு ஏற்பட்டது. அதற்குப் பின் இருவரும் இதுவரை பேசிக் கொள்ள வில்லை.
0 comments:
Post a Comment