சென்னை: ரஞ்சி கோப்பை தொடரில் இன்று தமிழக அணி, வலுவான மும்பையை சந்திக்கிறது. அதிக புள்ளிகள் பெற்றால் தான் காலிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், மழை பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. ரஞ்சி கோப்பை தொடரில், சூப்பர் லீக் "ஏ' பிரிவில் தமிழகம் இடம் பெற்றுள்ளது.
இதுவரை முடிந்த 5 போட்டிகளில் (மொத்தம் 7) தமிழகம், ஒரு வெற்றி, 4 டிராவுடன் 11 புள்ளிகள் பெற்று, 3 வது இடத்தில் உள்ளது. இதே பிரிவிலுள்ள மும்பை (20 புள்ளி) காலிறுதியை உறுதி செய்துள்ளது. அடுத்த நிலையில் டில்லி (12), குஜராத் (10), பெங்கால் (9) அணிகள் உள்ளன. இந்நிலையில் தமிழகம் தனது 6வது லீக் போட்டியில், வலிமையான மும்பை அணியை எதிர்கொள்கிறது. ஏற்கனவே சென்னையில் நடந்த 4 போட்டிகள் மழையால் அதிகமாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் மழை, தொடரும் பட்சத்தில் மீண்டும் போட்டி டிரா ஆகும். இதனால் இந்த ஆண்டும் ரஞ்சி கோப்பை வெல்ல வேண்டும் என்ற தமிழகத்தின் கனவு நனவாகாது. ஏனெனில், புள்ளிப்பட்டியலில் 2 பிரிவிலும் முதல் 3 இடத்தில் உள்ள அணிகள் தான், காலிறுதிக்கு செல்லும். மற்ற இரண்டு இடங்களுக்கு, பிளேட் அளவிலான போட்டிகளில் ("ஏ', "பி' பிரிவு) முதல் இரு இடங்களை பெறும் அணிகளுக்கு வாய்ப்பு தரப்படும். தவிர, தமிழகத்தின் பத்ரி நாத் (599 ரன்கள்) தவிர, மற்ற பேட்ஸ்மேன்கள் ஏமாற்றுவதும், இத்தொடரில் 16 விக்கெட் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் இல்லாததும், தமிழகத்துக்கு நெருக்கடி தந்துள்ளது.
0 comments:
Post a Comment