புதுடில்லி: டெஸ்ட் அரங்கில் 50வது சதம் அடித்து வரலாறு படைத்த சச்சினுக்கு பாராட்டு மழை குவிகிறது. இவருக்கு நாட்டின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டுமென இந்திய ஒலிம்பிக் சங்க துணை தலைவர் வி.கே.மல்கோத்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடந்தது. இப்போட்டியின் 2 வது இன்னிங்சில் சச்சின் (111*) சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் 50 சதம் அடித்த உலகின் முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். புதிய சாதனை படைத்த சச்சினுக்கு கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வி.கே. மல்கோத்ரா(ஒலிம்பிக் சங்க துணை தலைவர்):
டெஸ்டில் 50வது சதத்தை எட்டிய சச்சின் மகத்தான சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் தனக்கு மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த தேசத்துக்கே பெருமை சேர்த்துள்ளார். இந்தியாவின் மிகச் சிறந்த விளையாட்டு நட்சத்திரமாக திகழ்கிறார். இந்த நேரத்தில் அவருக்கு நாட்டின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும். நாட்டுக்காக இன்னும் பல ஆண்டுகள் விளையாட காத்திருக்கிறார். இது வரை இவர் உலக கோப்பை மட்டும் வெல்லவில்லை. அதனையும் வென்று சாதிப்பார் என நம்புகிறேன்.
தோனி (இந்திய கேப்டன்):
டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சினை பாராட்ட வார்த்தைகள் போதாது. நான் கடந்த 2004ம் ஆண்டு இந்திய அணியில் காலடி வைத்தேன். அது முதல் அவருடன் வலைப்பயிற்சியில் பங்கேற்று வருகிறேன். ஆரம்ப காலத்தில் அவர் எப்படி முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டாரோ, அப்படியே தான் கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். 21 ஆண்டுகளாக கிரிக்கெட் மீது அவர் கொண்ட ஈடுபாடு, இன்னும் குறையவில்லை. இது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது.
ரசித் லத்தீப் (முன்னாள் பாக்., வீரர்):
கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த வீரராக தன்னை நிரூபித்துள்ளார் சச்சின். கிரிக்கெட்டுக்காக தன்னை அர்ப்பணித்துள்ள சச்சினின் ரன் தாகம் இன்னும் குறையவில்லை. கடந்த 21 ஆண்டுகளாக கிரிக்கெட் அரங்கில் சாதித்து வரும் சச்சின், ஒரு சகாப்தம்.
மியான்தத் (முன்னாள் பாக்., வீரர்):
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் சாதனை வீரராக வலம் வருகிறார் சச்சின். ஒரு சிலரால் மட்டுமே நீண்ட காலம் கிரிக்கெட்டில் விளையாட முடியும். அவரது சாதனைகளை தகர்ப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று.
மொயின் கான் (முன்னாள் பாக்., வீரர்):
தற்காலத்து இளம் வீரர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு ஜொலிக்கிறார் சச்சின். சாதிப்பதற்கு வயது தடையல்ல என்பதை நிரூபித்துள்ளார். வயது பல கடந்தாலும், கிரிக்கெட் மீது அவர் கொண்ட ஈர்ப்பு இன்னும் குறையவில்லை.
அச்ரேக்கர் ( சச்சினின் இளமை கால பயிற்சியாளர்):
சச்சினின் சாதனை குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். அவரது பயிற்சியாளர் என்ற முறையில், எனக்கு மட்டும் இது பெருமை அல்ல. இந்தியாவுக்கே பெருமை. சச்சினின் சாதனையை யாராலும் தகர்க்க முடியாது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலககோப்பையை, சச்சின் பெற்றுத் தர வேண்டும் என்பதே எனது விருப்பம். சச்சின் எனது விருப்பத்தை நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கிறேன்.
பிராட்மேனை முந்துகிறார்
டெஸ்ட் அரங்கில் சிறந்த வீரர் சச்சினா அல்லது பிராட்மேனா என்ற வாதம் மீண்டும் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் "சிட்னி மார்னிங் ஹெரால்டு' பத்திரிகை "இன்டர்நெட்' மூலம் கருத்து கணிப்பு நடத்துகிறது. இதில் சச்சின் 63 சதவீத ஓட்டுகளுடன் முன்னிலையில் உள்ளார். பிராட்மேன் 37 சதவீத ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேன் 52 டெஸ்ட் போட்டியில் 29 சதம் உட்பட 6996 ரன் (99.94 சராசரி) எடுத்துள்ளார். சச்சின் 175 போட்டியில் 50 சதம் உட்பட 14513 ரன்(56.91 சராசரி) எடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment