ஆஸி., பயிற்சியாளர்: ராஜ்பால் விருப்பம்

Wednesday, December 8, 2010

புதுடில்லி: "" இந்திய ஹாக்கி அணிக்கு, ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பயிற்சியாளராக இருக்க வேண்டும்,'' என, கேப்டன் ராஜ்பால் சிங் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக இருந்த ஜோஸ் பிராசாவின் ஒப்பந்த காலம் முடிவடைந்தது. மீண்டும் இவரது பதவிக்காலத்தை நீட்டிப்பதில், ஹாக்கி இந்தியா அமைப்புக்கு விருப்பம் இல்லை என தெரிகிறது. தவிர, அணி வீரர்களுக்கும் இதில் உடன்பாடு இல்லை. இதனால் புதிய பயிற்சியாளரை தேடி வருகிறது ஹாக்கி இந்தியா.

இது குறித்து அணியின் கேப்டன் ராஜ்பால் சிங் கூறியது:

பயிற்சியாளர் தேர்வில், ஹாக்கி இந்தியா கவனத்துடன் செயல்பட வேண்டும். இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ., ) வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். புதிய நுணுக்கங்கள் அறிந்தவராகவும், அணியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பவராகவும் பயிற்சியாளர் இருக்க வேண்டும். வெளிநாட்டை சேர்ந்தவரோ, இந்தியரோ என்பதில் பிரச்னை இல்லை. என்னைப் பொறுத்த வரை, ஆஸ்திரேலியாவை சேர்ந்தவரை, பயிற்சியாளராக நியமிக்கலாம்.

பயிற்சியாளர் பதவிக்காலம் குறைந்தது 10 ஆண்டுகளாகாவது இருக்க வேண்டும். அப்போது தான், அணியை நல்ல முறையில் வளர்ச்சி அடைய செய்ய முடியும். தலைமை பயிற்சியாளர் தேர்வு முறையில் பின்பற்றப்படும் முறையே, தேசிய பயிற்சியாளர் தேர்விலும் கையாள்வது நல்லது. தவிர, விளையாட்டு மனோதத்துவ நிபுணரும் அவசியம். இதன் மூலம் வீரர்கள் மனநிலை வலுவடையும். இவ்வாறு ராஜ்பால் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

share

Share

feedburner